தூறல்....

Saturday, January 08, 2005

தூறல்....





உலகம்

'பாமரன்' தவறுகள்
தண்டிக்கப்படுகின்றன!

'படித்தவன்' தவறுகள்
மன்னிக்கப்படுகின்றன!

'பணக்காரன்' தவறுகள்
தர்மங்கள் ஆகின்றன!

-யாழ் சுதாகர்

படைப்பு.

மனிதனுக்குள்...

'கடல்' அளவு ஆசை வைத்து...

'குளம்' அளவு ஆயுள் வைத்தான்...

கடவுளின் குறும்பு!

-யாழ் சுதாகர்


அன்றும் இன்றும்...

அன்றைய அரிச்சந்திரன்...
சத்தியத்திற்காக
குடும்பத்தை வீதிக்குக் கொண்டு வந்தான்!

இன்றைய அரிச்சந்திரன்
சத்தியத்தை வீதிக்குக் கொண்டு வருகிறான்.

குடும்பத்திற்காக!

-யாழ் சுதாகர்


மதம்

மனங்களை இணைத்து மானுடம் உயர்த்த
தோன்றிய மதத்தை....
மனங்களைப் பிரிக்கும் மதங்களாய் இங்கே
மாற்றினான் மனிதன்!

குணங்களை வளர்க்க நல்வழி சொன்ன மதங்களின் கையில்
ஆயுதம் திணித்து வன்முறை வேதம் படைத்தவன் மனிதன்.

பிறவிகள் எத்தனை வந்தாலும் இங்கே
மரம் செடி கொடிகளாய்
பிறப்பதே அரியது.

உருவத்தில் மனிதராய்
உள்ளத்தில் அசுரராய்
உலகினில் பிறப்பது...பாவத்தில் கொடியது!

பாவங்கள் முடியுமா?
--யாழ் சுதாகர்

தெய்வம்

சங்கம் கண்ட வசந்தத் தமிழ் - நெஞ்சில்
சந்தன வாசம் வீசும் தமிழ்

சிங்க வீரம் கொடுத்த தமிழ் - நம்
சிந்தை யெல்லாம் சுடரும் தமிழ்!

தங்கத் தமிழ்... தாயே தமிழ்- உயர்
நம்பிக்கையின் ஊற்றே தமிழ்!

தூங்காத் தமிழ்... துணிவே தமிழ் -மனத்
துயரம் போக்கும் தெய்வம் தமிழ்!

- யாழ் சுதாகர்


மனிதன்

மாற்றுக் கோவணத்துக்கு
வழியில்லாதவனிடம்
பட்டு வேஷ்டியைப்
பரிசாய்க் கொடுத்தேன்.

அவனோ...

' நீ அடுத்தவனிடம் கொடுத்தது
இதை விட நல்லாயிருக்கு...'

என்றான்!

- யாழ் சுதாகர்


அம்மா

கடவுள்...தனது இருப்பை
நிரூபிப்பதற்காக
தனது... கை வசம் வைத்திருக்கும்...
உலகின்... கண் வசம் வைத்திருக்கும்
ஒரே ஆதாரம்.

அம்மா...
உருகாதவரையும்
உருக வைக்கும்
நடமாடும் திருவாசகம்...

- யாழ் சுதாகர்


யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.